மருந்து தட்டுப்பாட்டால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நேற்று அறிவித்தார்.
எனினும் இந்தியாவின் தலையீட்டுடன் உதவிக்கான வாக்குறுதிகள் கிடைத்ததை அடுத்து அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடம்பெறும் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சில நோயாளிகளைக் சமாளிக்கப் போதுமான அளவிலேயே உள்ளது. இதனால் மருத்துவமனையில் ஏற்கனவே சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் நிறுத்தப்படுவதாக பேராதனை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நேற்றுக் காலை அறிவித்துள்ளார்.
இதேளை, இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த நெருக்கடியை கண்டு கலங்கியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயை தொடர்பு கொண்டு இந்த நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண இந்தியா எவ்வாறு உதவ முடியும்? என உரிய தரப்பினருடன் ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இதனையடுத்தே சத்திரசிகிச்சை மீண்டும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அத்தியாவசிய உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய டொலர் இன்றி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதுவரை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கே பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் தற்போது அவசர உயிர்காப்பு சத்திரசிகிச்சைகளுக்கு தேவையாக மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.