“ஸ்டார்லிங்க்” செயற்கைக்கோள் இணையத் திட்டம் விண்வெளியில் அதிக இடத்தை நிரப்புகிறது என்ற கூற்றை நிராகரித்துள்ளார் எலோன் மஸ்க்.
“பல்லாயிரக்கணக்கான பில்லியன்” செயற்கைக்கோள்களுக்கு பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் இடமளிக்க முடியும் என்று அவர் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்.
வளர்ந்து வரும் வணிக விண்வெளித் துறைக்கு திரு மஸ்க் “விதிகளை உருவாக்குகிறார்” என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) தலைவர் கூறியதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
இந்த வாரம், தனது விண்வெளி நிலையம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக சீனா புகார் செய்திருந்தது.
“விண்வெளி மிகவும் பிரமாண்டமானது, செயற்கைக்கோள்கள் மிகவும் சிறியவை” என்று திரு மஸ்க் தனது பேட்டியில் கூறினார்.
திரு மஸ்க் தனது ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் திட்டம் செயற்கைக்கோள் துறையில் போட்டியாளர்களின் நுழைவை தடுக்கிறது என்ற கருத்துக்களைப் புறந்தள்ளினார், பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களுக்கு போதுமான இடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
“இது நாம் மற்றவர்களை எந்த வகையிலும் திறம்பட தடுக்கும் சூழ்நிலை அல்ல. எதையும் செய்வதிலிருந்து நாங்கள் யாரையும் தடுக்கவில்லை, நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
“இரண்டாயிரம் செயற்கைக்கோள்கள் என்பது ஒன்றுமே இல்லை, இது பூமியிலுள்ள இரண்டாயிரம் கார்களை போன்றது,” என்று அவர் மேலும் கூறினார்.