உதவிகள் மற்றும் கடன் சார்ந்து இருப்பதை விட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விரைவான வளர்ச்சியை செயற்படுத்த நாடுகளுடன் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டு முயற்சி ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு நேற்று(26) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் செயலகம் குறிப்பிட்டுள்ளது. பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.