வடக்கில் ஏற்கனவே சுமார் 1150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயற்பட்டு வரும் நிலையில் இதனை 5000 ஏக்கரில் விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நான் அமைச்சராக பொறுப்பேற்க முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 கடலட்டைப் பண்ணைகளும், யாழ்.மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் செயற்பட்டன. நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன. யாழ். மாவட்டத்தில் இதுவரை 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் அங்கு மேலும் பல பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். இதை யாரும் அப்போது அரசியல் ஆக்காத நிலையில் தற்போது சீன இராணுவம் வந்திருப்பதாகக் கூறுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனுமதி பெறாமல் பருத்தித்தீவில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, ஐயா வரும் வரை அமாவாசை காத்திருக்காது என்ற அமைச்சர், பருத்தித்தீவு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் கிடைக்கும் என்றார். கடலட்டை பண்ணை விடயத்தில் உங்கள் மீது விமர்சனங்கள் உள்ளனவே எனக் கேட்டபோது, நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது இயல்பு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நான் எனது அரசியல் செயல்பாடுகளை மக்கள் நலன் சார்ந்தே இன்று வரை செய்து வருகிறேன். 15 வருட கால ஆயுதப் போராட்டமும் 30 வருட கால தேசிய அரசியலின் அனுபவம் எனக்கு இருக்கிறது. அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளேன். இன்னும்பல தேவைகளை நிறைவேற்றுவேன். அட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.