இந்தியா இலங்கைக்குப் படைகளை அனுப்ப வேண்டும் என்ற சுப்ரமணிய சுவாமியின் வேண்டுகோள் தொடர்பில் ஊகங்களை வெளியிடுகிறார் ஒரு அரசியல் ஆய்வாளர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கருத்து வௌியிட்டுள்ளார்.
வரலாற்று பிணைப்புள்ள அயலவரான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தலைநகர் புது டெல்லியில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அயல்நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைவான பாதுகாப்பை மீள உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் இந்தியாவிற்கு எதிரான வௌிநாட்டு சக்திகள் மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமாக்கி வருவதாகவும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் முதிர்ச்சியும், சர்வதேச சட்டங்கள் தொடர்பில் ஆழ்ந்த அறிவும் கொண்ட சுவாமியின் இந்தக் கருத்து புதிய ஊகங்களை எழுப்புகின்றது என்கிறார் ஒரு நோக்கர்.
“இந்தியா தனது படைகளை அனுப்ப வேண்டுமானால் அதற்கான சர்வதேச சட்ட நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறில்லாதவரை படைகளை அனுப்புவது சர்வதேச சட்ட மீறலாக அமைந்துவிடலாம். அதற்கான சிறந்த அண்மைய உதாரணம் யுக்ரைன். அடிப்படையில், அது இலங்கையின் ஒரு வேண்டுகோளாகக் கூட இருந்திருக்கலாம். அவ்வாறாயின், இலங்கை அரசு அவ்வாறானதொரு வேண்டுகோளை முன்வைத்ததா? அதை நிறைவேற்றும்படி கேட்கிறாரா சுவாமி? அவ்வாறானதொரு வேண்டுகோள் இருந்தும் இந்தியா படைகளை அனுப்பவில்லை என்றால் ஏன்? அண்மைய எதிர்காலத்தில் இந்தியா படைகளை அனுப்புவதற்கான வாய்ப்புகள் உண்டா? அதனால்தான் ‘இன்னும் நாங்கள் படைகளை அனுப்பவில்லை’ என்ற தொனியில் இந்திய அரசின் இறுதி அறிக்கை அமைந்துள்ளதா?” என்று வினவுகிறார் அந் நோக்கர்.