மசகு எண்ணெய் பீப்பாய் 27 அமெரிக்க டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்படும் நிலையில் நாட்டுக்கு தற்போது கொண்டு வரப்படும் அனைத்து எரிபொருள் வகைகளின் விலையினை 70 ரூபாவால் குறைக்க முடியுமென ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்ததன் பயனை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இரு தரப்பு அரசியல்வாதி களும் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மசகு எண்ணெய் பீப்பாய் 27 அமெரிக்க டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்படும் நிலையில் நாட்டுக்கு தற்போது கொண்டுவரப்படும் அனைத்து எரிபொருள் வகைகளின் விலையினை 70 ரூபாவால் குறைக்க முடியும். ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்ப டீசல் விலைகளை மேலும் குறைக்க முடியும். 95 ஒக்டேன் பெற்றோலுக்கும் சுப்ப டீசலுக்கும் முறையே 80 ரூபா மற்றும் 67 ரூபா வரி விதிக்கப்படுகிறது.
இதேவேளை ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 200 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக மீனவ சமூகங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை என்றும் தற்போது விலையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நான்கு தடவைகள் மூடப்பட்டது.
கடந்த 48 நாட்களாக சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விற்பனையின் மூலம் ஒரு லீற்றருக்கு 300 ரூபா இழப்பு ஏற்படுவதாக கூறி மண்ணெண்ணெய் விலையை 220 ரூபாவாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விலையை அதிகரிப்பதற்கு பதிலாக, அதிகாரிகள் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை சுமார் 70 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.