இங்கிலாந்து இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர்
இந்த தம்பதி இங்கிலாந்து பக்கிங்கம் அரண்மனையில் இருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர் . இது உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹரி-மேகன் தம்பதி க்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மேகன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் அரியணை வாரிசாக ஹரி 6-வது இடத்தில் இருக்கிறார். இருப்பினும் இவர் அரச குடும்பத்தை விட்டு விலகியது அரச குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ள நிலையில் ஹரி நிரந்தரமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேசமயம் அரச குடும்பத்திற்கு மீண்டும் வரமாட்டோம் என்று இளவரசர் ஹரியும், மேகனும் எலிசபெத் ராணியிடம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பக்கிங்கம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
36 வயதான ஹரி ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் பணிபுரிந்தவர். இதனால் அவருக்கு கடற்படை, விமானப்படை ஆகியவற்றால் பல கௌரவபட்டங்கள் வழங்கப்பட்டன. இப்போது இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக இவர் விலகுவதால் இந்த பட்டங்களையும் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக விலகினாலும் உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிலும் இணைந்து ஹரி- மேகன் தம்பதி தமது சேவைகளை தொடர உறுதியாக இருக்கிறார்கள் என்று இந்த தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.