உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான காவற்துறையினர், இராணுவத்தினர் என பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுக்ள ஸ்ரீலங்காவின் பல இடங்களிலும் நாளைய தினம் நடைபெறவுள்ளன.
அத்துடன் நாளைய தினம் இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்த ஈஸ்டர் பண்டிகையும் இருப்பதால் ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களினதும் பாதுகாப்பிற்காக 12,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரதேசத்திலும் இனவாத, முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இருந்தால் உடனடியாக பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் வழங்கும்படியும் ஸ்ரீலங்கா மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையின் கீழ் இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த மொத்தம் 9,365 அதிகாரிகள் கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 2,522 முப்படை வீரர்களும் பாதுகாப்பு வழங்க ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.
நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள தேவாலயங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.