போர்ட் சிட்டி எதிர் மனுக்கள்-நாளையும் தொடரும் விசாரணை

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தென்னிலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சார்ந்த சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை உச்சநீதிமன்றம் நாளைய தினம் வரை ஒத்திவைத்திருக்கின்றது.

கொழும்பு போர்ட் சிட்டி சார்ந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீது கடந்த திங்கட்கிழமை முதல் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திவருகின்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்பாக இந்த மனுக்கள் மீதானவிசாரணை இன்றைய தினமும் நடைபெற்றது.

நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையில் பிரசன்னமாகியிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மேலதிக சொலிசிடர் ஜெனரலுக்கு, நாளைய தினம் இந்த சட்டமூலத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தும்படி நீதிமன்றம் இன்று உத்தரவி்டடுள்ளது.

மனு விசாரணையின்போது ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ ஜயசுந்தர சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த சட்டமூலத்தில் ஏற்படுத்தவேண்டிய திருத்தங்களை அரசாங்கம் சட்டமா அதிபரிடம் கையளித்துவிட்டதாக தெரிவித்தார்.

அதேவேளை உத்தேச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றிய பணிகள் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்கிற திருத்தமும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையாகிய மேலதிக சொலிசிடர் ஜெனரல் பர்சானா ஜமீல், உத்தேச சட்டமூலத்தின் நாடாளுமன்ற தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதை நீதிமன்றில் தெரியப்படுத்தினார்.

உத்தேச குறித்த திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் அவர் நீதிமன்றத்தில் இன்று சமர்பித்தார். அந்த வகையில் ஆவணத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar