புலம்பெயர் சமூகத்துடன் பொன்சேகா ஒப்பந்தம்- வீரசேகர மோதலில்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் புலம்பெயர் சமூகம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே இரகசிய ஒப்பந்தமொன்று இருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த ஒப்பந்தம் காரணமாகவே தமிழ்ப் பிரதேசங்களில் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – மிருசுவில் படுகொலை குற்றவாளியான முன்னாள் படைச்சிப்பாய் சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டது தவறு என வாதிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், நியாயமான வழியிலேயே விடுதலை செய்யப்பட்டதாகக் கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும்  நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கடும் மோதல் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர, 

“மிருசுவில் படுகொலை வழக்கிலிருந்து சுனில் ரத்நாயக்க விடுதலையாக்கப்பட்டமை தவறுஎன்றும் அந்தக் குற்றச்சாட்டில் சிக்கிய அனைத்து சிப்பாய்களும் சிறைதள்ள வேண்டும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த படுகொலையை யார் செய்திருந்தாலும் அதனை கண்டிக்கின்றோம். ஆனால் படையினரை பற்றி இவ்வாறு விக்னேஸ்வரன், கூட்டமைப்பினர், கஜேந்திரகுமார் கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி கூறியிருப்பதை ஏற்கமுடியாது” எனத் தெரிவித்தார்.

எனினும் இந்தக் கருத்தினைத் தொடர்ந்து சபையில் எழுந்து பதிலளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவச் சீருடையை அணிந்தமைக்காக படுகொலை இழைக்க முடியாது என்று கூறினார்

சுனில்  ரத்நாயக்க, கரன்னாகொட என யார் கொலை செய்தாலும் அது தண்டனைக்குரியதாகும் என்றும், அப்படியானவர்கள் தூக்குமேடைக்கு செல்லவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியதோடு, அது இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதற்கு சமமாகாது என்றும் கூறினார்.

சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்தை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெனீவா அமர்விற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேற்குலகம் உட்பட புலம்பெயர் சமூகத்திற்குதேவையாக  வழிகளை பொன்சேகா செய்ததாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒன்றரை கோடி ரூபாவும் அதேபோல 5 இலட்சத்து 27000 ஆயிரம் டொலர்களும் பொன்சேகாவின் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பொன்கோ மாத்திரம் போர்செய்யவில்லை என்றும், அந்தக் குழுவிலிருந்த ஐவரில் தானும் ஒருவர் எனவும் சபையில் குறிப்பிட்டார்.

விடுதலைப் பலிகள் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்கின்றபோது எதிர்க்காத பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்படுகையில் டொலர்களைப் பெற்று அவருக்கெதிராக குரல் கொடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் குழுவினர், படையினர் போரில் இனப்படுகொலையை செய்ததாக  தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா 2010 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை எவ்வாறு வெற்றிகொண்டார் எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் வீரசேகர, அதற்குப் பின்னால் புலம்பெயர் சமூகம் மற்றும் விடுதலைப் புலிகளுடனும் பொன்சேகாவிற்கு இரகசிய ஒப்பந்தம் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்  சரத் வீரசேகர நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டங்கள் பலவற்றையும் மீறியே சபையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar