இலங்கை ஓமான் அமைச்சர்கள் முக்கிய கலந்துரையாடல்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, ஓமான் சுல்தானேற்றின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கைஸ் பின் முஹம்மத் அல் யூசெப்புடன் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மெய்நிகர் ரீதியாக கலந்துரையாடியுள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் அதன் விஷேட பொருளாதார வலயத்திலிருந்து உருவாக்கப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை இராஜாங்க அமைச்சர் பாலசூரிய எடுத்துரைத்தார். மருந்துகள், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளிலான முதலீட்டுத் திறனை அவர் விரிவாகக் குறிப்பிட்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பில், பயிற்சி பெற்ற இலங்கை சுகாதாரப் பணியாளர்கள் ஓமானில் பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இராஜாங்க அமைச்சர் ஆராய்ந்தார்.

முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஓமானின் முன்முயற்சிகளை எடுத்துரைத்த அமைச்சர் அல்-யூசெப், தமது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு ஓமான் ஒரு போக்குவரத்து மையமாகவும் நுழைவாயிலாகவும் இருப்பதற்கான திறனை வலியுறுத்தினார்.

இது ஏற்றுமதிகளை மீள ஏற்றுமதி செய்வதற்கான மையமாக ஓமானைப் பயன்படுத்துவதற்கான வழிவகைகளை இலங்கைக்குத் திறக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். திறமையான தொழிலாளர்களை சுகாதாரத் துறையில் பணியமர்த்துவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை ஆராய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இரு நாடுகளின் தேசிய வர்த்தக சங்கங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையையும், கொழும்பு மற்றும் சோஹர் துறைமுகங்களுக்கு இடையே நேரடி கொள்கலன் சேவையை நிறுவுவதற்காக இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே இடம்பெற்று வரும் கலந்துரையாடலையும் இரு அமைச்சர்களும் வரவேற்றனர்.

இருதரப்பு வர்த்தகத்தில் வளர்ந்து வரும் வேகம் மற்றும் இலங்கையிலிருந்தான மேம்பட்ட ஏற்றுமதி உட்பட இரு நாடுகளுக்கிடையேயான முதலீடுகள் குறித்து ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் விரிவாக விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar