எம்மினத்தைக் காயப்படுத்தி மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது நியாயமல்ல.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கு மாகாணத்தில் மாற்றுச் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்று கருத்துத் வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் அம்மக்களின் உணர்வுகளை மதித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். தாம் யதார்த்தமாகப் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டும் விதமாகச் செயற்படுதல் கூடாது.

அனைத்து இனங்களையும் மதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் எம்மினத்தைக் காயப்படுத்தி அதன் மூலம் மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்த எண்ணுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யுத்த காலத்தில் வட மாகாணத்திலிருந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் இடம்பெற்றது. இது குறித்து தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இன்று நேற்றல்ல அவர் காலா காலமாகச் சொல்லிக் கொண்டு வருவதே. ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனை அவர் குறிப்பிடுவது தமிழ் மக்களை இன்னும் மனம்நோகச் செய்யும் விடயமாகும்.

நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றே மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றோம். எமக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதும் இல்லை, வாக்களிக்கவும் மாட்டார்கள். எனவே அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எம் சமூகத்தை நோகடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அரசியலுக்காவோ, வாக்கிற்காகவோ அல்லாத, தனிமனித ஒழுக்கம் சார்ந்த விடயமாக இருக்கின்றது.

நமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், தமது கருத்துக்கள் இரண்டு பிராந்தியங்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள்?

வரலாறு என்பது அனைவருக்கும் ஒன்றே. ஒரு இனத்தை அழிக்காமல் அவர்களை உயிருடன், பாதுகாப்பாக வெளியேற்றியமை தொடர்பில் வெட்கப்படும் நம்மவர்கள் எமது இன மக்களை கொத்துக் கொத்தாகக் காட்டிக் கொடுத்தும் எல்லைப் புறக் கிராமங்களில் வெட்டியும், சுட்டும் இனஅழிப்புச் செய்த விடயத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். எத்தனை அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இதற்கெல்லாம் வெட்கப்பட மாற்றுச் சமூகத்தில் இரந்து எந்தப் பிரதிநிதியும் வரமாட்டார்கள்.

ஊர்காவற்படை, புலனாய்வாளர்கள் என்ற பெயரில் எத்தனையோ அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இந்த அழிப்புகளில் கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இவைகளை பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் யார் வெட்கப்படப் போகின்றார்கள்?

வெறுமனே தாம் அறிந்த விடயங்களை வைத்து மாத்திரம் கருத்து கூறுதல் தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். கிழக்குத் தமிழ் மக்களையும் நினைவில் வைத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பாதிப்புற்ற ஒரு சமூகம் தமக்காக பாடுபடும் கட்சி என்ற நம்பிக்கையில்தான் எம்முடன் அன்று தொட்டு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதத்தில் கருத்துக்கள் கூறுவது நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், நடவடிக்கைகளை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் மீது கொண்டுள்ள மதிப்பினை அவரே குறைத்துக் கொள்ளக் கூடாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் தாம் கூறும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கரிசனை கொள்ள வேண்டும். இனியாவது அவர் விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் நிந்தனைக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு இன்னலை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்பதே எமது நோக்கம், எமது மக்களின் நோக்கமும் அதுவேயாகும்” என்று தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar