கடும் உணவுத் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பன போதிய அளவு உணவு உட்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலகின் பட்டினி அபாய நாடுகள் மற்றும் அடுத்த மூன்று மாதங்களில் மிக மோசமான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நாடுகள் என இந்த அறிக்கை பெயரிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் உணவுப்பொருட்களுக்கான செலவுகள், எண்ணெய் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் 2022ஆம் ஆண்டில் இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரித்துச் செல்லுமென அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூன் மற்றும் செப்ரெம்பர் காலப்பகுதிக்குள் இலங்கையின் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.