இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வருவதற்கு அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ள தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அரசியல் புகலிடம் எதுவும் கோரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் டானி சங்கிராட் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்திற்கு வருவதற்கு அனுமதிக்குமாறு இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து வேண்டுகோள் கிடைத்துள்ளது.
இருநாடுகளிற்கும் இடையிலான நீண்டகால உறவுகளின் அடிப்படையில் இது குறித்து ஆராயப்பட்டது. இராஜதந்திர கடவுச்சீட்டுக்குரியவர் என்ற அடிப்படையில் 2013ம் ஆண்டு இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் கைச்சாத்தான விசா விலக்கு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி விசா இல்லாமல் தாய்லாந்திற்கு வரலாம் 90 நாட்கள் தங்கியிருக்கலாம். இது வேறுபயணத்தை மேற்கொள்வதற்கான தற்காலிக ஏற்பாடு அரசியல் தஞ்சம் எதுவும் கோரப்படவில்லை என்றார்.
இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத்சான் ஓசா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது. இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.