ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டிய பல முன்மொழிவுகள் மற்றும் உடன்படிக்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியா பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான கட்ட இணைப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், பெரும்பாலும் தீவின் வடக்குப் பகுதியில், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, மருந்துக் கொள்வனவு மற்றும் பால் கைத்தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம்மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடியை ஜனாதிபதி சந்தித்து, கடன் மறுசீரமைப்பு செயல்முறை உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். கடந்த ஆண்டு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இதேவேளை, ஜனாதிபதியின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கை வந்திருந்தார். கடற்றொழில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு செல்லவுள்ளனர்.