நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலொன்றுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலிலுள்ள டீசல் தொகையை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு மேலும் இரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்காக ஓராண்டு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தின் கீழான முதற்கட்ட விமான எரிபொருள் எதிர்வரும் 12 – 14 ஆம் திகதிக்கு இடையில் நாட்டை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் அனுமதி அட்டை கியூ.ஆர். முறைமையுடன் அரசாங்க வாகனங்களை பதிவு செய்வதற்காக, பொதுவான பதிவு முறைமையைப் பயன்படுத்தி அவ் வாகன சாரதியின் அல்லது வாகனத்தைப் பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவிலக்கத்துடன் ஒரு வாகனத்திற்கு ஒரு கையடக்க தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து சகல நிறுவனங்களுக்கும் தமது வியாபார பதிவு இலக்கம் அல்லது வழங்கப்படும் விசேட அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு விசேட தொலைபேசி இலக்கத்துடன் அவ் அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது வர்த்தக ஸ்தாபனத்திற்கு சொந்தமான சகல வாகனங்களையும் பதிவு செய்வதற்கான அனுமதி உரித்தாகும். அதன் பின்னர் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக கியூ.ஆர். பதிவினை நீக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.