ஜனாதிபதி நாட்டின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நபராக மாறி மக்களின் வாக்குரிமையை மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அடிமட்டத்தில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான நிறுவனமாக உள்ளூராட்சி மன்றங்களை அழைக்கலாம் எனவும், தற்போது மாகாண சபைகளும் இயங்காத நிலையில் அதுவும் நிறைவேற்று அதிகாரத்தின் கைகளில் தவழும் சந்தர்ப்பத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாதது நாட்டின் அடிப்படை ஜனநாயகக் கட்டமைப்பை அழிப்பதாக தான் கருதுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கும் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதற்கும் எதிராக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் தடைகள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அடியாக அமையவதாகவும், இதன் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் கூட தடைபடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிதி இன்மை என காரணம் காட்டி உள்ளூராட்சி மன்ற தேர்தலை சீர்குலைக்கும் தற்போதைய அரசாங்கம், நிதியில்லை என்று கூறி எதிர்காலத்தில் பொதுத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் சீர்குலைக்கலாம் எனவும், ஜனாதிபதி நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நபராக மாறி மக்களின் வாக்குரிமையை கூட மீறிவருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.