இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்களில் நேற்று அறிவித்துள்ளார்.2007 (ரி-20) மற்றும் 2011 இல் இந்தியாவின் வரலாற்று உலகக் கிண்ண வெற்றிகளில் ஹர்பஜன் சிங்கின் பங்களிப்பும் மகத்தானது. அவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு ரி-20 சர்வதேச போட்டியொன்றில் விளையாடி இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச ரி-20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். 41 வயதான ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஹர்பஜன் சிங், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த ஐ.பி.எல். தொடரின் முதல் கட்டத்தின் போது ஒரு சில போட்டிகளில் விளையாடினார். ஓய்வு தொடர்பில் ஹர்பஜன் சிங் கூறுகையில், அனைத்து நல்ல விடயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டை விட்டு நான் விடை பெறுகிறேன். இந்த 23 ஆண்டு கால பயணத்தை அழகாக்கிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் என்றார்.