புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும் தனி நபர்கள் சிலரினதும் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை ஏனைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. 18 அமைப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடையும் 316 பேருக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும் நபர்கள் சிலரினதும் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளமை நல்லதொரு விடயம். அரசின் இந்த நடவடிக்கையை நாம் வர வேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் மீள் எழுச்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம். இதனை உணர்ந்து சில புலம்பெயர் அமைப்புகளினதும், தனி நபர்களினதும் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. நாட்டின் நலன் கருதி தற்போதைய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கின்ற அதேவேளை புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கமாகப் பேசி நாட்டுக்காக அவர்களின் உதவிகளை அரசு பெறவேண்டும். அதற்காக ஏனைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.