இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் ரி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ரி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் கப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52, கப்டன் ஆரோன் பின்ச் 7, ஸ்டீவ் ஸ்மித் 9, மக்ஸ்வெல் 6, டிம்டேவிட் 54 ஓட்டங்களும் அடித்தார். இதையடுத்து 187 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ஓட்டத்துடன்; வெளியேற, கப்டன் ரோகித் சர்மா 17 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 63, சூரியகுமார் யாதவ் 69 ஓட்டமும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 25 அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ரி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.