அவுஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆட்சி மாற்றம் உருவாகியுள்ளது. தொழிற் கட்சியின் சார்பில் அதன் தலைவரான அந்தனி அல்பானீஸ் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தேர்தல் நடைபெற்று இரண்டு தினங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் அவுஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
அது மாத்திரமன்றி 10 வருடங்களின் பின்னர் தொழிற்கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் என்ற சிறப்பையும் பெறுகின்றார். 151 உறுப்பினர்களைக் கொண்ட பாரா ளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற ஆகக் குறைந்தது 76 உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் வரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின்படி தொழிற்கட்சிக் கூட்டணிக்கு 75 ஆசனங்களே கிடைத்துள்ளன. இன்னும் 4 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் முன்னாள் ஆளுங்கட்சியான லிபரல் தேசியக் கட்சிக் கூட்டணிக்கு 57 ஆசனங்களும், சுயேட்சை உள்ளிட்ட பிறகட்சிகளுக்கு 15 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
முழுமையான தேர்தல் முடிவுகள் வரை காத்திருக்கும் அவகாசம் பிரதமருக்கு இருந் திருக்கவில்லை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ‘குவாட்’ அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் செல்ல வேண்டியிருந்ததாலும், தனது கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும், அவசர அவசரமாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அவர் டோக்கியோ சென்றி ருந்தார். 25ஆம் திகதி நாடு திரும்பிய அல்பானீஸ் முதல் வேலையாக தனது தாயாரின் கல்லறைக்குச் சென்று திரும்பியிருந்தார். சிட்னி விமான நிலையத்தை இரவு வேளையில் வந்தடைந்த அவர் 20வருடங்களுக்கு முன்னர் மே மாதம் 25ஆம் திகதி மறைந்த தனது தாயாரின் கல்லறைக்குத் தன்னந்தனியனாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அந்த நாட்டு ஊடகங்கள் மிகப் பெரிய செய்தியாக்கின, தனியொரு மகனைத் தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்கிய தனது தாயாருக்கு நன்றி செலுத்துவது ஒரு மகனின் கடனல்லவா? அதனை அவர் மிகவும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்.
அதேபோன்று, தன்னை நம்பிவாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் மிகவும் சிறப்பாகப் பூர்த்தி செய்வாரா என்பதே மக்கள் முன்னுள்ள பெறுமதியான கேள்வி. மேற்குலகின் ஜனநாயக விழுமியங்களைக்கடைப்பிடிப்பதில் பெருமை கொள்ளும் அவுஸ்திரேலியா தனது சக நாடுகளைப் போலன்றி மக்கள் போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ தனது நாட்டில் நடப்பதில்லை என்பதை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் ஒரு நாடாக உள்ளது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. ஆனால், முதலாளித்துவ ஜனநாயகங்களில் நிலவும் ஒடுக்குமுறையும், வர்க்கப் பாகுபாடும் அங்கு நீக்கமற நிறைந்து நிற்கின்றது என்பதே உண்மை. முதலாளித்துவ வர்க்கத்தினரால் சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளிகள் ஓரணியாகத் திரண்டுவிடக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா, மறைமுக வேலைத்திட் டங்கள் ஊடாகத்தொழிலாளர்களின் திரட்சியைத் தடுத்து வருகின்றது. அதன் ஒருஅங்கமாக தொழிலாளர்களுக்காகக் குரல்தரக் கூடிய கட்சிகளை மறைமுகமாக இல்லாமற்செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
கம்யூனிச நாடுகள் எனத் தம்மை அறிவித்துக் கொண்டுள்ள சீனா, கியூபா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஜனநாயக விரோதம் எனச் சித்தரித்து வரும் முதலாளித்துவ ஜனநாயக நாடுகள், முடிந்தவரை தமது நாடுகளில் பெரு முதலாளிகளின் நலன் பேணும் இரண்டு கட்சிகளின் பிடியில் ஆட்சி இருக்கக் கூடியதான நடைமுறையைப் பேணி வருகின்றன.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் என இதற்கான எடுத்துக்காட்டுகள் பல உள்ளன அந்த வரிசையில் உள்ள நாடாகவே அவுஸ்திரேலியாவும் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னான வரலாற்றில் இன்றுவரை அந்த நாட்டை தொழிற்கட்சியும் லிபரல் கட்சியும் மாத்திரமே மாறிமாறி ஆண்டு வந்திருக்கின்றன. அத்தகைய போக்கு தொடர்ந்து நீடிக்கும் அறிகுறிகளே தற்போது வரை உள்ளன.
எனினும் மக்களின் மனநிலையில் மாற்றம் உருவாகி வருகின்றமையை அவதானிக்கமுடிகின்றது. ஆளுங்கட்சிகள் என்று வகைப்படுத்தப்படும் இரண்டு கட்சிகளும் இதுவரை 132 ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தாலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 68.5 சதவீத வாக்குகளை மாத்திரமே அவை பெற்றுள்ளன. 31.5 சதவீத வாக்குகள் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராகவே அளிக்கப்பட்டு உள்ளன. வேறு வகையில் சொல்வதானால் மொத்த மக்கள் தொகையில் மூன்றிலொருபங்கினர் இரண்டு கட்சிகளையும் நிராகரித்து உள்ளனர்.
கொரோனாப் பெருந்தொற்றுக் காலகட்டத்தில் முன்னைய அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தை மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை. கட்டாயத் தடுப்பூசி நடவடிக்கைகள் ஆகட்டும், உள்ளிருப்பு மற்றும் ஊரடங்கு விடயங்கள் ஆகட்டும், பின்னான காலகட்டத்தில் அனைத்து விதிகளையும் தளர்த்தி ‘மந்தை நிர்ப்பீடனத்துக்கு’ வழி சமைத்ததாகட்டும் அனைத்திலும் சாமானிய மக்களின் நலன் என்பதற்கு அப்பால் பெருமுதலாளிகளின் நலன்களே மேலோங்கி இருந்ததை மக்கள் மறந்துவிடத்தயாராக இல்லை, அது மாத்திரமன்றி, சாதாரண மக்களிடம் வரி வசூலிப்பதில் எந்தவிதத் தளர்ச்சி யையும் கடைப்பிடிக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், பெருமுதலாளிகளுக்கு கடன் களை வழங்கியது மாத்திரமன்றி, வரித்தளர்ச்சி மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கியிருந்தமையும் மக்கள் மனதிலே பசுமையாக உள்ளன.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்ப டுத்துவதில் இருந்து விலகி, சிக்கன நடவடிக்கைகளைக் கைக்கொள்வதிலேயே குறியாக இருக்கப்போவதன் அறிகுறிகள் தென்படத்தொடங்கியுள்ளன. அது மாத்திரமன்றி, முன்னைய அரசாங்கம் பின்பற்றிய மக்கள் விரோதச் செயற்பாடுகளையே தொடர்வதிலும் ஆர்வம் காட்டுகின்றது. அகதிகளைக் கையாளுதல் உள்ளிட்ட பல விடயங்களில் எதுவித கொள்கை மாற்றங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை. அத்தோடு, முன்னைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையையே புதிய அரசாங்கமும் தொடர உள்ளதாகத் தெரிகின்றது. உலகின் கடைக்கோடியில் உள்ள நாடு அவுஸ்திரேலியா, கண்ணுக்குத் தெரிந்த வரை எதிரிகள் யாரும் இல்லாத நிலையிலும், அமெரிக்க தலைமையிலான மேற்குலகுடன் இணைந்து சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை எதிரிகளாகக் கருதிச்செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
அவுஸ்திரேலியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள இன்றைய தருணத்தில் தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால்தாம் தலையிடவேண்டி ஏற்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்திருக்கின்றார். அந்த அறிவிப்பை ஆமோதித்து, அதற்கேற்ப காய்நகர்த்தும் பணிகளை தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
புதிய அரசாங்கம் அமைந்தகையோடு டோக்கியோவில் நடைபெற்ற குவாட் மாநாட்டுக்காக தன்னோடு வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வொங் அம்மையா ரையும் அழைத்துச் சென்றிருந்தார் பிரதமர் அல்பானீஸ். நாடு திரும்பிய பென்னி வொங் தற்போது பசிபிக்தீவு நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். சீனாவுடனான மோதலுக்கு ஆதரவு திரட்டும் அமெரிக்காவின் செயற்திட்டத்துக்கு ஏற்பவே அவரின் பயணம் அமைந்துள்ளது. இதேநோக்கத்தோடு தலைமை அமைச்சர் அல்பானீஸும் வெகுவிரைவில் இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார். மக்கள் நலன் பேணும் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்குடனேயே அரசாங்கமொன்றை மக்கள் பதவியில் அமர்த்துகிறார்கள். ஆனால், தம்மை பதவியில் அமர்த்திய மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, தமது உண்மையான எஜமானர்களான பெரு முதலாளிகளுக்கும், அவர்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள போர் வெறி பிடித்த மேற்குலக அரசாங்கங்களுக்கும் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கருதி ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதை உலகளாவிய அடிப்படையில் பார்க்க முடிகின்றது. அவுஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ளதை உண்மையான ஆட்சி மாற்றம் என எவ்வாறு கருதுவது?
credit to; சுவிசிலிருந்து சண் தவராசா