பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் நேற்று (20/01) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஒரே சமூகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் இலக்கென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்களின் அடைவு மட்டம், மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக தாரிக் அஹமட் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் பலப்படுத்துவதற்தான திட்டத்தை வகுத்து முன்னோக்கி செல்வதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளுக்கு பிரித்தானியா தலைமை தாங்குவதனால், அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.