நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வகட்சி அரசு மிக அவசியம் எனவும் குறித்த செயற்பாட்டிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக இன்றைய தமிழ் பத்திரிகைகளில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள நிலையிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள கலந்துரையாடலில் பங்குபற்றுவதுடன் இயன்றவரை அனைத்து ஒத்துழைப்பினையும் நல்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பிரச்சினை தீர வேண்டுமாயின், சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம் எனவும் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தேசிய பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்கு முறையில் தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மக்கள் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ள சவாலான சூழலிலிருந்து மீள்வதற்கு அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கடந்து, ஓரணியாக செயலாற்ற முன்வர வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பதுடன், அந்த நோக்கம் செயல் வடிவம் பெறுவதற்கான பங்களிப்பையும் செய்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
சர்வகட்சியில் பங்கெடுப்பதன் மூலம் யுத்தத்தின் மூலம் இழப்புகளை சந்தித்துள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களையும் வகுத்துக்கொண்டு, ஒரு தேசிய இனமாக முன்னோக்கிச்செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.