இராஜாங்க அமைச்சரை வழிமறித்து சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறுமியின் வீட்டுக்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த நேற்று சென்ற நிலையில் அவரின் வாகனத்தை வழிமறித்து நீதி கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூங்கிலாறு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமைக்கான சான்றுகள் காணப்பட்டன. இந்நிலையில் உடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலும் ஆராயும் நோக்கிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.
அவருடன் மாவட்ட அரச அதிகாரிகளும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களுடன் பேசி, ஆறுதல் தெரிவித்தனர். இங்கு கருத்து வெளியிட்ட அதிகாரிகள், கிராமங்களில் சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு மது, போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது. இதனை உறுதி செய்யவே சம்பவம் குறித்து உடன் விசாரணை நடத்த அமைச்சர் வந்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

அத்துடன், கிராமத்தில் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கும் அமைச்சு ஊடாக உதவ முடியும்.
பெண்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யக்கூடிய வகையில் பிரதேச செயலாளருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார். இந்நிலையில் சிறுமி வீட்டுக்குச் சென்ற அமைச்சர் வந்த வாகனத்தை மறித்து, நீதிகோரி மூங்கிலாறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முதன்மை வீதியில் முன்னெடுத்தனர். எனினும் மக்களுடன் பேசிய புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அமைச்சரின் வாகனம் தொடர்ந்து செல்ல வழியேற்படுத்தினர். சிறுமி மரணம் தொடர்பில் துரித கதியில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதி வழங்கினார். இதனையடுத்து அமைச்சரின் வாகனத்துக்கு வழிவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் மூங்கிலாறு சந்தியில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். பேரணி உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரைசென்றடைந்து நிறைவடைந்தது. 

Spread the love