ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவின் 1 ஆவது படைப்பிரிவு தலைமையக முகாமில் 12 ஏக்கர் வயல் நிலயத்தில் இராணுவத்தினர் நெற்செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள். மத அனுஷ்டானங்களுடன் அறுவடை நிகழ்வு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றுள்ளது. இயந்திரங்கள் எதுவும் அறுவடை விழாவில் பயன்படுத்தப்படவில்லை.
முன்னதாக நிகழ்வில் கலந்து கொள்ளும் படை அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு அறுவடை நிகழ்வு விமர்சையாக நடைபெற்றுள்ளது. மத வழிபாடுகளுடன் படையினர்கள் அரிவாள் கொண்டு கையால் நெல்லினை அறுவடை செய்து அதனைக் கொண்டுவந்து நிலத்தில் போட்டு மாட்டினை கொண்டு நெல்லினை பறித்து அதனை கையால் காற்றில் தூற்றி எடுத்த நெல்லினை மண்பானையில் இட்டு படை அதிகாரிகளுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் வணசிங்க, மற்றும் படைப்பிரிவு அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கிராம சேவையாளர் உள்ளிட்ட படை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.