இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனையா? ஐக்கிய மக்கள் சக்தி சாடுகிறது

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான்பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான்பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பம். எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாது மக்கள் வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எனக்கூறி, இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது, என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Spread the love