இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இந்த வருடத்தில் கடந்த 333 நாட்களில் 10,713 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த முறைப்பாடுகளில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக 1,632 வழக்குகளும், 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக 2,626 வழக்குகளும் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற “சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடுவதில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது பதிவாகாத சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.