இலங்கையில் போக்குவரத்துக்காக சைக்கிள்களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சூழல் மாசடைவதை தடுக்கும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சைக்கிள் பாவனை அதிகரிக்குமானால் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு செலவழிக்கும் பணத்தில் 334 ரூபாவினை அரசாங்கம் சேமிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். சைக்கிள் பாவனையின் மூலம் 236.50 ரூபா சேமிக்க முடியுமெனவும், வாகன பாவனை மூலம் செலவாகும் 103.50 ரூபாவும் சேர்த்து சேமிக்க கூடிய பணம் தொடர்பிலேயே அவர் கூறியுள்ளார்.
“ஆரோக்கிய வாழ்வுக்கு சைக்கிள்” எனும் நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். அமைச்சரவை திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அது அமுலுக்கு வருமெனவும் தெரிவித்த அவர், வீதியில் ஒரு பகுதி சைக்கிளுக்கான பகுதியாக பிரித்து அதற்கான சட்டமுறைகளையும் அமுல் செய்யும் திட்டமுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளி மாசை தடுக்கவும், நோய்களை தடுக்கவும், இந்த திட்டம் உதவுமெனவும், சைக்கிள் பாவனையாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்த அவர் மக்களிடமும் தனியார் அமைப்புகளிடமும் இதற்கான ஆதரவினை கோருவதாகம் தெரிவித்தார்.
மீண்டும் வாகன இறக்குமதி ஆரம்பிக்கும் போது அதிகமாக இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்யவே முக்கியத்துவம் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும், ஏழைகளின் வாகனமாக காணப்பட்ட சைக்கிள், தற்போது பணக்காரர்களின் வாகனமாக மாறிவிட்டதாக ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் மகிந்த அமரவீர தனது உரையில் தெரிவித்துள்ளார்.