இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தை கேள்வி கேட்கும் தார்மீக உரித்து, சட்டரீதியான உரித்து இந்தியாவிடம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை விழுது சமூக மேம்பாட்டு அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற அரசியல் வாதிகளை அணுகும் நிகழ்வில் “13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் இருந்தும் இல்லாத நிலை” தொடர்பாக மக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தை 13 ஆவது தொடர்பாக கேள்வி கேட்கும் தார்மீக உரித்து, சட்டரீதியான உரித்து இந்தியாவிடம் தான் இருக்கிறது. இந்தியா இது தொடர்பாக கோரிக்கை விடுத்தால் இலங்கை அரசாங்கம் அதற்கு காது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இந்தியாவிற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
சட்டத்தில் இருக்கும் ஒன்றை நடைமுறைப்படுத்தாது இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் ஏற்பட்டால் அதனை செய்ய முன்வருவார்கள் என்பது எனது கருத்து. நாமாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு அதனைப் பெற இயலாது. நான் முதலமைச்சராக இருக்கும் போது இது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரியிருந்தேன். அப்போது அது தொடர்பாக நாம் யோசிக்கிறோம்; கொள்கையின் படி மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்கட்டினை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களின் இலக்கு, கொள்கை, எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி ரீதியிலான அதிகாரம் வடக்குகிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே. 13 ஆவது திருத்தச் சட்டம் தற்போது சட்டத்தில் இருப்பதனை நடைமுறைப்படுத்தக் கோருவதே என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.