அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(22) மாலை கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.
கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.
விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார். பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டார். இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ´Hamilton Class High Endurance Cutter´ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.
மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.
P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.