இலங்கையை சரியான திசையில் நகர்த்தும் விடயத்தில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் மேலும் சிறந்த விதத்தில் செயற்படவேண்டும் என உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீளநிகழாமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தென்னாபிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளிற்கான அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிசேனவும் – ரணிலும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்ச்சி நிரலை உருவாக்க முன்வரவில்லை எனவும் ஐ.நா.வின் அறிக்கையாளர் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டவர்கள், பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர் என முன்னைய ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தது பிழையான விடயம் என்பது நிருபிக்கப்பட்டது. தற்போதும் அந்தக் கருத்து பிழை, பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கையை தீவிரமாக கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திரிகள் உலகின் பல பகுதிகளிற்கும் சென்று தமது நாடு சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் செய்வதாக நம்பவைக்க – சமாதானப்படுத்த முயல்கின்றனர் என்ற செய்திகளை பார்க்கின்றோம். சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தங்களிடம் உள்ள குறைந்த வளங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்க முடியும் எனத் தெரிவித்திருப்பதை அறிகின்றோம். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இதனை காணமுடியவில்லை என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். காணாமல்போனவர்களிற்கான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சிலர் தயாராயிருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் முழுமையான நிகழ்ச்சித் திட்டமொன்றை கொண்டிருக்கவில்லை . தற்போது அதன் நிகழ்ச்சி நிரலிற்கும் பொறுப்புக் கூறலிற்கும் இடையில் சிறிய தொடர்புமில்லை என தெரிவிக்க விரும்புகின்றேன். இலங்கையை சரியான திசையில் நகர்த்தும் விடயத்தில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் மேலும் சிறந்த விதத்தில் செயற்படலாம். இலங்கை நெருக்கடியின் பல்வேறு தருணங்களில் ஐ.நா. தலைமையகத்தின் மௌனம், விளங்கப்படுத்த முடியாததாக காணப்பட்டதுடன் எந்த விதத்திலும் பயனுடையதாக காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்