உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்ய பயங்கர ஆயுதங்கள் மற்றும் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தில் வெளியிட்ட வீடியோவில் அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, நாடு முழுவதும் பெரிய அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள தெற்கு மற்றும் மேற்கு இராணுவ மாவட்டங்களில் இருந்த சில படை பிரிவுகள், தங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்ப தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் சில இராணுவ டேங்கர்கள் மற்றும் பிற இராணுவ வாகனங்கள் ரயில்வே பிளாட்கார்களில் ஏற்றப்படுவதைக் காட்டுகிறது.
அதே வேளை நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவின் படை விலகல் பற்றிய எந்த ஆதாரத்தையும் இதுவரை காணவில்லை என்றார். மாறாக, ரஷ்யா தனது இராணுவக் கட்டமைப்பைத் தொடர்வதாகத் தெரிகிறது என்றார்.