உக்ரைன் மீது தொடர்கிறது ரஷ்யாவின் கடும் தாக்குதல்


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுக்கள் நடைபெற்றுள்ளபோதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் கார்கில் போன்ற முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் அரச கட்டடம் ஒன்று தரைமட்டமாகியுள்ளது. இந்தக் கட்டடம் “நகரின் மையத்தில், சுதந்திர சதுக்கத்தின் விளிம்பில் அமைந்திருக்கும் கார்கீவின் சிறப்புமிக்க அரசாங்க தலைமையகம்” என்று உக்ரைன் பத்திரிகையாளர் கிறிடோஸ்டாபர் மில்லர் அடையாளப்படுத்தியுள்ளார். இந்தக் கட்டடம் தரைமட்டமாகும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்கேரியா, போலந்து, சுலோவாக்கிய ஆகிய நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ளன என்று உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்தது. பல்கேரியா 30 விமானங்களையும், போலந்து 28 விமானங்களையும், சுலோவாக்கியா 12 விமானங்களையும் வழங்கவுள்ளன என்று கூறப்படுகின்றது. அதேநேரம் உக்ரைனுக்கு அயல்நாடான பெலாரஸ், ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி பிரதான கோபுரம் மீதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதனால் உக்ரைன் தொலைகாட்சி சேவைகள் பாதிப்படைந்துள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்கீவ் நகரில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே இந்த மாணவன் உயிரிழந்துள்ளார் என்று தெரிகின்றது. கார்கீவ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் கற்பதற்குச் சென்ற இந்தியாவின், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், ரஷ்யாவின் தாக்குதலில் காரில் பயணித்த இஸ்ரேலியர் ஒருவரும் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love