உக்ரைன் – மேற்குலகின் ஆடுகளம்?

சண் தவராஜா;

உக்ரைன் மீது படையெடுப்பதற்கான காரணங்களை ரஸ்யா பொதுவெளியில் முன்வைத்தபோது ஒரு சிலருக்கு அவற்றை நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால், படையெடுப்புக்குப் பிந்திய மேற்குலகின் நடவடிக்கைகள் ரஸ்யாவின் அச்சம் நியாயமானதே என்பதை உறுதி செய்துள்ளன.

அளவு கணக்கின்றி அள்ளி வழங்கப்படும் ஆயுதங்கள், அத்தகைய ஆயுதங்களைப் பாவிப்பதற்குத் தேவையான பயிற்சிகள், பயிற்சி வழங்குவது என்ற போர்வையில் தமது படைத்துறை அதிகாரிகளை ஆலோசகர்களாகச் செயற்பட வழங்கியுள்ள அனுமதி, ரஸ்யாவுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போரிடக் கூடிய தமது பிரஜைகளைத் தடுக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு, பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி உலக அரங்கிலிருந்தே ரஸ்யாவை அகற்றிவிடச் செய்யும் முயற்சிகள் எனப் பல வழிகளிலும் மேற்குலகம் இந்தப் போரில் நேரடியாகப் பங்குபற்றுவதைக் காண முடிகின்றது. இதனால்தானோ என்னவோ, ரஸ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் இணக்கப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு இடைத்தரகராகச் செயற்படத் தான் தயார் எனவும் சீனா அறிவித்துள்ளது.


தற்போதைய யுத்தம் உக்ரைன் மண்ணில் நடைபெற்றாலும், ரஸ்யப் படைகள் தனியே உக்ரைன் படையினருக்கு எதிராக மாத்திரம் போரிடவில்லை என்பதைச் செய்திகள் தெரிவிக்கின்றன. போலந்து எல்லையோரமாக அமைந்திருந்த பயிற்சி மையம் ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை ரஸ்யா நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 பிரித்தானியப் பிரஜைகள் உள்ளடங்கலாகப் பல வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது. கொல்லப்பட்ட பிரித்தானியர்கள் மூவரும் பிரித்தானிய சிறப்புப் படையணியின் முன்னாள் உறுப்பினர்கள் எனப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான மையம் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் படையினருக்கு ஆதரவாகப் போரிட வருபவர்களை ஒன்றிணைக்கும் இடமாகவும், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆயுத தளபாடங்களின் களஞ்சியமாகவும் செயற்பட்டதாக ரஸ்யத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமது நாட்டுப் பிரஜைகள் மரணத்தைத் தழுவியதை இதுவரை உறுதி செய்திராத பிரித்தானியா மறுபுறம் தனது நாட்டுப் பிரஜைகள் யாரும் உக்ரைன் மண்ணில் போரில் பங்கு கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது. எனினும் இது உண்மையில்லை. உக்ரைன் போரில் ஆயிரக் கணக்கான கூலிப் படையினர் பங்கெடுத்து வருகின்றனர். உக்ரைன் போர் தொடங்கிய நாட்களில் தனது நாட்டுப் பிரஜைகள் உக்ரைன் போரில் பங்கெடுப்பதைத் தான் வரவேற்பதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்திருந்தமை தெரிந்ததே. எனினும் இதனை பின்னர் அரசாங்கம் மறுத்திருந்தது. ஆனாலும், இந்த மறுப்பு வெறும் கண்துடைப்பே என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.


இதேவேளை, பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணங்களின் பிரகாரம் சோவியத் ஒன்றியத்தின் உடைவு நிகழ்ந்த 1991ஆம் ஆண்டு முதலே, ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தைப் பலப்படுத்தும் செயற்திட்டம் ஒன்றை பிரித்தானியா நடைமுறைப்படுத்தி வந்ததாகத் தெரிகின்றது. “உக்ரைனுக்கான படைத்துறை உதவி 2014 – 2021” என்ற தலைப்பிலான அறிக்கை மார்ச் 4ஆம் திகதி வெளியானது. அதன் பிரகாரம் உக்ரைனுக்கான படைத்துறை உதவிகள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. அதாவது, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைத்துறை உதவிகள் உக்ரைனுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டன. 2015அம் ஆண்டில் ‘சுற்றுப்பாதை நடவடிக்கை’ என்ற பெயரிலான திட்டமொன்றை பிரித்தானியா அறிவித்தது. இதன் நோக்கம் இராணுவ தளபாடங்களை உக்ரைனுக்கு வழங்கலும் பயிற்சி அளித்தலும் ஆகும் இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களில் 2.2. மில்லியன் பவுண்டஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. 2019இல் வெளியான தகவலின் பிரகாரம் இந்தத் திட்டம் 2023 வரை தொடர இருக்கிறது. 


கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உக்ரைனும் பிரித்தானியாவும் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கைக்கு அமைய கடற்படையினருக்குப் பயிற்சி வழங்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குறுகிய காலத்தில் 22,000 படையினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், அமெரிக்காவும் 1990களில் இருந்தே உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை பெருந்தொகையில் வழங்கி வருகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமை ஆற்றிய உரையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிதாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 9,000 கவச வாகன எதிர்ப்புத் தொகுதிகள், 700 விமான எதிர்ப்புத் தொகுதிகள், 7,000 சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் 20 மில்லியன் ரவைகள் என்பவை அடங்கும். அத்தோடு, தாக்குதல் நடத்தக் கூடிய தானியங்கி விமானங்கள் மற்றும் சோவியத் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பவையும் வழங்கப்பட உள்ளன.


“நாங்கள் கடந்த வருடத்தில் உக்ரைனுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருந்தோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் 650 மில்லியன் டொலர் பெறுமதியான விமான எதிர்ப்பு, கவச வாகன எதிர்ப்பு ஆயதங்களை வழங்கியிருந்தோம். ஆக்கிரமிப்பு தொடங்கிய போது, ரஸ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கத் தேவையான ஆயுதங்கள் அவர்களின் கைவசம் இருந்தன. 


போர் ஆரம்பமானதும் அவர்களது தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் 350 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்கினோம். நூற்றுக்கணக்கான விமான எதிர்ப்புத் தொகுதிகள், ஆயிரக்கணக்கான தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், உலங்கு வானூர்திகள், ஆயுதம் தரித்த கண்காணிப்புப் படகுகள், துரிதமாகப் பயணிக்கக் கூடிய வாகனங்கள், எறிகணைகளையும், தானியங்கி விமானங்களையும் கண்டறியக் கூடிய ராடார் கருவிகள், பாதுகாப்பான தொலைத் தொடர்புக் கருவிகள் மற்றும் செயற்கைக் கோள் படங்கள் என அனைத்தையும் வழங்கினோம். இவை ரஸ்யப் படைகளுக்குப் பேரிழப்பை வழங்கியிருக்கும் என நம்புகிறோம்.” இது ஜோ பைடனின் உரையின் ஒரு பகுதி. அவரது உரையில், உக்ரைன் பிரச்சனைக்குச் சமரசத் தீர்வு காண்பது பற்றியோ, தற்போது ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படுவது தொடர்பாகவோ மருந்துக்குக் கூடக் குறிப்பிடப்படவில்லை என்பதிலிருந்தே அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.


ரஸ்யப் படையெடுப்புக்கு முன்னதாகவே தாங்கள் உக்ரைனைத் தயார் நிலையில் வைத்திருந்தோம் என ஜோ பைடன் பகிரங்கமாக ஒத்துக் கொண்ட பின்னரும், ரஸ்யாவின் படை நடவடிக்கை வெறும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பே என நம்புவோரை என்னவென்று சொல்வது? 


இன்றுவரை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட 14 நாடுகள் உக்ரைனுக்கு வெளிப்படையாக ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளன. நடுநிலை நாடுகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் கூட ஆயிரக் கணக்கான தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளன. யதார்த்தத்தில் உக்ரைனில் மேற்குலகுக்கும் ரஸ்யாவுக்குமான போர் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே ஆரம்பித்து விட்டது. தற்போதுதான் அது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது.

மேற்குலகின் பகடைக் காய்களாகத் தாம் பயன்படுத்தப் படுகின்றோம் என்பதை உக்ரைன் மக்கள் என்று உணர்ந்து விழிப்படைகின்றார்களோ அன்றுதான் அவர்கள் மண்ணில் போர் முடிவுக்கு வரும் என்பதே நிச்சயம்.

மீள் பிரசுரம்; நன்றி வீரகேசரி Sun, 20 Mar 2022 

Spread the love