உணவு, கல்வி, சுகாதாரத்துக்கு பெரும் நெருக்கடிஇலங்கை மக்களுக்கு தரிதமாக உதவுங்கள்

இலங்கையின் சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி, பாதிப்புக்குள்ளாகும் இலங்கையர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் மோசமாக உள்ளன. இது நாட்டில் உணவு, சுகாதாரம் மற்றும் கல்வியை பாதிக்கிறது என நேற்று தனது ட்விட்டரில் இட்டுள்ள வீடியோ பதிவு ஊடாக ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நண்பர்கள் இப்போது துரிதமாக இலங்கைக்கு உதவ வேண்டும், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கவும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பை வழங்கவும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அந்தப் பதிவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்கள் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக இலங்கைக்கு சேவையாற்றிய பெருமை எனக்கு கிடைத்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற் றில் இந்த நாடு முன்னேறுவதை நான் கண்டிருக்கிறேன். 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கை போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. மேலும் சர்வதேச கல்வித் தரம் நோக்கி நாடு முன்னேறியது.

ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் இன்று இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவதற்கும் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை.நீங்கள் நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு டொலரும் ஒரு உயிரைக் காப்பாற்றவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கவும், சிறுவர்களின் கல்விக்கும் உதவும். இதற்காக துரிதமாக உதவ வேண்டிய நேரம் இது. இலங்கையை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்ஹம்டி விடுத்துள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Spread the love