உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 11 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (29) உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிற அன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர். இதில் வழக்கில் இருந்து 3 பேரை விடுவித்தது அத்துடன் 63 பேரில் 51 பேர் பிணையில் வெளிவந்துள்ளதுடன் தொடர்ந்து 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பெண் ஒருவரை மட்டும் அழைத்து வந்த நிலையில் அவரை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில் விடுவித்ததுடன் ஏனைய 11 பேரையும் எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.