நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுகின்றன.
எரிபொருள் இன்மையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்நேரத்திலும் எரிபொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பலரும் அதிகாலை வேளையிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்கின்றனர்.
மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கின்ற நிலையில், பெட்ரோலை ஏற்றிய கப்பல் வருகை தரும் உரிய திகதியை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை வௌியிடவில்லை.
இந்திய கடன் வசதியின் கீழ் நாட்டிற்கு வருகை தரும் இறுதி டீசல் கப்பலொன்று நாளை(16) நாட்டை வந்தடையவுள்ளது. அதன் பிரகாரம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாத காரணத்தினால், இன்று(15) முதல் குறைந்த எண்ணிக்கையிலான பௌசர்களே நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி இயங்கும் என பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.