எரிபொருள் விலையேற்றத்தால் நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்!

பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் என்பன எரிபொருள் விலைகளை மேலும் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினாலும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவாலும், சுப்படீசல் லீற்றம் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 470 ரூபாவுக்கும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 550 ரூபாவுக்கும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 460 ரூபாவுக்கும், சுப்படீசல் லீற்றர் ஒன்று 520 ரூபாவுக்கும் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால்  எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பல்வேறு சேவைகளின் கட்டணங்களும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஸ், ரயில், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவை கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டு வருகின்றன. அத்துடன் பாடசாலை வாகன போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அது தொடர்பான சங்கம் ஆராய்ந்து வருகின்றன. இந்நிலையில் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கொள்கலன்கள் சேவைகள் கட்டணங்களை உயர்த்தவுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பஸ் சேவைகளை நஷ்டத்துடனேயே நடத்திச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளதாகவும், இதனை ஈடு செய்ய பஸ் கட்டணங்களை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலாவது பஸ் கட்டணத்தை அதிகரிக்கவே எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் ஜுலை முதலாம் திகதி முதல் வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி கட்டணத்தை அதிகரிக்காது இருக்க முடியாது என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.  இதனால் எதிர்வரும் நாட்களுக்குள் அதிகாரிகள் பஸ் கட்டண அதிகரிப்புக்கு இணங்காவிட்டால், பஸ் போக்குவரத்தில் இருந்து விலக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்பதுடன், ஆரம்பக் கட்டணத்தை 40 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்றால் போன்று முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முச்சக்கர வண்டிகளில் முதலாவது கிலோ மீற்றருக்கு 100 ரூபா முதல் 120 ரூபா வரையிலும், இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 80 ரூபா முதல் 100 ரூபா வரையிலும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஏற்கனவே மின்சார சபை திட்டமிட்டுள்ள நிலையில், தற்போதை எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து அந்தக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய மற்றைய சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

Spread the love