மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேலும் சில விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதனிடையே, எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கியிடமிருந்து 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களின் சந்தை கேள்விக்கு அமைய பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, நகரங்களில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 வீதமான நுகர்வோர் நகரங்களில் வசிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர தற்போது நாளாந்தம் 60,000 சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்ற போதிலும், எதிர்வரும் நாட்களில் அதனை 30,000 வரை குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.