கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை அதிகளவிற்கு மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிக்கி ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஒப்பந்தத்தை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் வங்குரோத்தாகி விட்ட இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குநரான சீனாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள், அந்நியச்செலாவணி கையிருப்புக்கள் இல்லாமையாலும் துயரத்திலும் மூழ்கியிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் நாட்டினது நிதித்துறை குழுவை வழிநடத்தும் விக்கிரமசிங்கவுக்கு ஒரு வலுவான சவாலாக வெளிப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான புதிய சுற்று கலந்துரையாடலில் இந்த முயற்சி தொடர்பான விடயம் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது என்பதையும் கடன்வழங்கிய அனைவரும் ஐக்கியப்படவேண்டும் தங்களிற்குள் மோதக்கூடாது என்பதையும் சீனாவிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சீனா வித்தியாசமான அணு குமுறையை பின்பற்றுகின்றது ஆகவே ஏனைய கடன்வழங்கும் நாடுகள் சீனாவுடன் எவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்பதே முக்கியமான கேள்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துசமுத்திரத்தில் பூகோள அரசியல் நிலைமை தீவிரமடைகின்றது. ஆனால் நாங்கள் இதுவரை அதனை தவிர்த்துக் கொண்டுள்ளோம் எங்களின் கடன் பிரச்சினையை முற்றாக பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கின்றோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடனை எவ்வாறு கருதுகின்றனர் கடன் நிவாரணத்தை எவ்வாறு கருதுகின்றனர் என்பதில் பிரச்சினைகள் காணப்படும் அவற்றில் சில பூகோள அரசியல் பாதிப்புகள் இருக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் கிட்ட தட்ட 44 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்ற கடன்களாகும். இலங்கையின் தற்போதைய நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டொலர்கள் ஆகும். தற்போது நாட்டில் 300 மில்லியன் டொலர்களே அந்நிய செலாவணியாக உள்ளன.இதனைக் கொண்டு, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து இறக்குமதிகளை மேற்கொள்ள முடியாது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதத்தில் உணவுப் பண வீக்கம் 82.5% ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சீனாவுடன் முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கொண்டிருந்த உறவு தற்போது வீழ்ச்சி கண்டிருக்கிறது. அண்மையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வந்த போது, இந்தியாவின் அதிருப்தியால், ஏற்பட்ட இலங்கையின் செயற்பாடு, இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக்கியது. இந்த சூழ்நிலையிலேயே சர்வதேச நாணய நிதிய பிணை மீட்புக்கு சீனாவின் வியத்தகு முடிவை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.