கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 17 பவுண்டரி உட்பட 175 ஓட்டங்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 96, அஸ்வின் 61, அனுமான் விஹாரி 58 ஓட்டங்களும் எடுத்தனர். 100 ஆவது டெஸ்டில் ஆடிய முன்னாள் கப்டன் விராட் கோலி 45 ஓட்டங்கள் எடுத்தார்.

7 ஆவது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில், 1986 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 ஆவது வீரராக களமிறங்கி 163 ஓட்டங்கள் எடுத்த கபில்தேவ் சாதனையை ஜடேஜா நேற்று முறியடித்தார். மேலும், ரவீந்திர ஜடேஜா ரிஷப் பண்ட், அஸ்வின் மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோருடன் இணைந்து 100 ஓட்டங்கள் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் மூன்று 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்களில் அங்கம் வகித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.

Spread the love