வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள “கோத்தபாய கடற்படை கப்பல்’ என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களால் முறியடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் காணிகளை சுவீகரிப்பதற்க்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்லவிடாது கடற்படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அளவீட்டு முயற்சிகள் தடுக்கப்பட்டடுள்ளது.
இதனையடுத்து, காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாமின் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும் அதனையே அளவீடு செய்யவே வந்திருப்பதாகவும் நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார். காணிகளை வழங்க முன்வந்தவர்கள் என தென்பகுதியை சேர்ந்த மூன்று காணி உரிமையாளர்கள் அங்கு வருகை தந்திருந்துள்ளனர். இருப்பினும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்தமைக்கமைய ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு வருகை தரவில்லை .
இதனையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடிதம் ஒன்று கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர். நில அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டம் மேற்கொண்ட போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், புலனாய்வாளர்கள், கடற்படையினர் மற்றும் தென்பகுதியிலிருந்து வருகைதந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் சிவநேசன் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளரின் கடமைக்கு கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களால் இடையூறு மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.
இதேவேளை கடற்படையினரோடு இணைந்து சிவில் உடையில் நின்ற சிலர் போராட்டக்காரர்களையும் ஊடகவியலார்களையும் புகைப்படம் எடுத்த போதிலும் பொலிஸார் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை. மாறாக கடமையில் இருந்த ஊடகவியலாரை கைது செய்யும் பாணியில் பிடித்து தடுத்து வைத்ததோடு புகைப்படம் எடுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் ஆட்சியை உறுதி செய்யவேண்டிய பொலிசார் முப்படைகள் மற்றும் புலனாய்வாளர்களின் ஊதுகுழலாக செயற்பட்டு ஊடகவியலாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.