தவறான நிர்வாகம் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம், பேரழிவிற்கு சென்றுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு இலங்கையின் ஆயர்கள், கிறிஸ்தவ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், கிறிஸ்மஸ் பருவத்தில் அதிக செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கிறிஸ்தவ மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள், நாட்டில் தாக்கம் செலுத்தியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அர்ப்பணிப்பை செய்யுமாறு ஆயர்கள் கோரியுள்ளனர். கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர், அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண் டோ, ஆயர்களின் இந்த கோரிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதோர் அனைவரும் கிறிஸ்மஸை ஆடம்பரமான முறையில் கொண்டாட வேண்டாம். அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் விருந்துகள் போன்ற தேவையற்ற விடயங்களுக்கு பணத்தை செலவிட வேண்டாம், அதற்குபதிலாக ஏழைகளுக்கு உதவ அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் வலியுறுத்தலையும்,கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர், அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.