குரங்கம்மை நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இறக்குமதி செய்யும் அவசியம் தற்போதைக்கு கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் குரங்கம்மை நோய்த் தொற்று உறுதியாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், இதனால் நோய்த் தொற்று தாக்கம் ஏற்படக்கூடிய ஆபத்தினை எதிர்நோக்கும் தரப்பினருக்கு தடுப்பூசி இறக்குமதி செய்யும் அவசியம் இல்லை என சுகாதார அமைச்சின் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குரங்கம்மை குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்த் தொற்று பரவியிருக்கக் கூடும் என சந்தேகம் ஏற்படும் உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிசோதனை கருவிகளைக் கொண்டு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமக்கு இந்த நோய்த் தொற்று பரவியிருக்கும் என சந்தேகிக்கும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு டொக்டர் ஹேரத் ஊடகங்களின் வாயிலாக கோரியுள்ளார்.