வரவு – செலவுத் திட்ட ஓதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சு கடந்த 18 மாதங்களில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 181 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது என்று சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டின் சுகாதார அமைப்புக்கு இவ்வளவு தொகையைச் செலவிடுவது ஓர் அரசால் எடுக்கப்பட்ட மிக உயர்ந்த நேர்மறையான நடவடிக்கையாகக் கருதப்படலாம். தடுப்பூசி போடும் திட்டமானது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதன் மூலம் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்துக்கு 14.5 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அவற்றை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான பூஸ்டர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேலும் பூஸ்டர் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.