கொரோனா என்னும் கொடுங்கிருமித்தொற்று நோய்க் கட்டுப்பாடுகள் அனைத்தையும் வரும் வாரம் முதற்கொண்டு நீக்குவதற்கு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போல இங்கிலாந்தும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சுமார் 1.60 லட்சம் மக்கள் கொரோனாவால் இறந்துபோயுமுள்ளனர்.
சமீபத்தில் கொரோனா திரிபான ஒமிக்ரான் பாதிப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்தவண்ணமிருக்கிறது. அத்துடன் பெருந்தொற்றுக்களின் நிலை தற்போது மீண்டும் சீராகி வரும் நிலையில், அரசால் விதிக்கப்பட்ட கட்டாய கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான முன் ஆயத்தமாக புதிய விதிமுறைகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று தனது டிவிட்டரில், ‘‘கொரோனா திடீரென்று மறைந்துவிடாது. இந்த கொடிய வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுப்பூசி, சோதனைகள் மூலம் வலுவான பாதுகாப்பை நாம் உருவாக்கியுள்ளோம்,கொரோனா பாதித்தவர்கள் யாரும் வருகின்றவாரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது”என்றார்
இதற்கு ஆய்வாளர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் சமூக ஆர்வலர்கள் மனிதாபிமானிகள் எனப்பலரும் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துவருகின்றனர். அத்துடன் இவை ஆபத்தான நடவடிக்கை ஏற்பாடுகள் எனவும், இத்தகைய ஏற்பாடுகள் மீண்டும் தொற்றுநோய் அதிகரிப்பை கொண்டு வரலாம் என எச்சரித்துள்ளனர். இதே நேரம் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் சுகாதார செய்தித் தொடர்பாளர் வெஸ் ஸ்ட்ரீடிங், ‘‘பிரதமர் ஜோன்சன் போர் முடிவதற்குள் வெற்றியை அறிவித்துவிட்டார்’’ என்று விமர்சித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் தளர்த்த அரசு முடிவெடுத்துள்ள இந்நிலையில், இங்கிலாந்தின் 2ம் எலிசபெத் ராணிக்கு (95 வயது) 2வது முறையாக கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்றுக்கானலேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அடுத்த சில நாட்கள் வீட்டிலிருந்தே தனது அலுவலக பணிகளை அவர் கவனிப்பார் என்றும் பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் வழியாக தகவல் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, இளவரசர் சார்ளஸ், அவரது மனைவி கமீலா ஆகியோருக்கும் இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.