நாட்டில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த எதிர்ப்பு பேரணி ‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கொழும்பை நோக்கி வந்தவண்ணமுள்ள நிலையில் கொழும்பின் பலபகுதிகள் முடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன. கொழும்பில் இரு வெவ்வேறு இடங்களில் இரு பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளன. இன்றைய பேரணியில் ஒன்று பொது நூலகத்திற்கு முன்னாலும் மற்றுமொரு பேரணி மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தடியிலும் ஆரம்பமாகியது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கும் பேரணி டெக்னிக்கல் சந்தி, புறக்கோட்டை பஸ்நிலையம், புறக்கோட்டை ரயில் நிலையம், ஹில்டன் சுற்றுவட்டத்தால் சென்று ஜனாதிபதி செயலகத்தை சென்றடையும். பொது நூலகத்தில் ஆரம்பிக்கும் பேரணி பித்தளை சந்தி, லிபேர்ட்டி பிளாஸா, கொள்ளுப்பிட்டி, காலி வீதி, காலி முகத்திடல் ஊடாக ஜனாதிபதி செயலகத்தை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.