சர்வதேச சமூகம் உதவி வழங்காது-பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டின் செலவினம் அதன் வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாகுமெனவும் இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச சமூகம் உதவிகளை வழங்காது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கு, நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு எந்தவொரு நாடும் இணங்கவில்லை. வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நாடுகளையும் அமைப்புகளையும் அணுகிவருகின்ற போதிலும், நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதுவரை பெறப்பட்ட அனைத்து கடன்களும் சில்லறை கடன்கள்’ என்றும் அவை பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகியவற்றின் தலைவர்கள் இலங்கைக்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் செலவினம் அதன் வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகம். இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச சமூகம் உதவிகளை வழங்காது. அண்மைக்காலத்தில் கிடைத்த உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அவற்றை பயன்படுத்த முடியாது. இத்தகைய உதவிகள் தேசத்தின் வளர்ச்சிக்காக அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை , மாறாக அதன் குடிமக்களின் உயிர், வாழ்வை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love