சீன உர நிறுவனத்திற்கு இணக்கப்பாட்டுடன் நஷ்டயீடு வழங்கும் இலங்கை அரசு

சீன சேதன உர நிறுவனத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாவனைக்கு உதவாத சேதன உரத்தை விநியோகம் செய்ததாக சீன உர நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த சீன நிறுவனத்தின் சேதன பசளையில் ஆபத்தான பொருட்கள் காணப்படுவதாக பரிசோதனைகளின் மூலம் அம்பலமாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்திடமிருந்து சேதன உரத்தை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் ரத்து செய்தது. தமது நிறுவனத்தின் சேதன உரம் தரமானது எனவும், ஏற்கனவே உரத்தை ஏற்றிய கப்பல் இலங்கையை அண்மித்துள்ளதாகவும் குறித்த சேதன உர நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது.

இது தொடர்பில் சீன நிறுவனம் தமது நிறுவனத்திற்கு நன்மதிப்பு ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நட்டம் ஏற்பட்டதாகவும் இதற்காக நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தது சிங்கப்பூர் தீர்ப்பாயமொன்றில் வழக்குத்தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உரிய தரத்துடன் மீளவும் உரத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் நியமங்களுக்கு அமைவாக உரத்தை உற்பத்தி செய்யுமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Spread the love