கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ஸ, தாம் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைக்கான சான்றிதழை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அப்போதைய உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
நாகானந்த கொடித்துவக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் பிரதிவாதியான அவர், சத்தியக் கடதாசி மூலம் இன்று நீதிமன்றத்தில் இதனை அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்ட விதம் காரணமாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முடியாமற்போனதாக தெரிவித்து நாகானந்த கொடித்துவக்கு உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டம், அரசியலமைப்பிற்கு அமைவாக அனைத்து வேட்பாளர்களும் தாம் அவ்வாறு போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் அல்லவென உறுதியளிக்க வேண்டும் என தமது சத்தியக் கடதாசியில் அவர் தெரிவித்துள்ளார்.